புதுக்கோட்டை அருகே பரிதாபம் மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் தீக்குளித்த முதியவர் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக மகன்கள் மீது வழக்கு
புதுக்கோட்டை அருகே மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் தீக்குளித்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி,
புதுக்கோட்டை அருகே மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் தீக்குளித்த முதியவர் பரிதாபமாக இறந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சொத்தில் பங்கு
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி சிலுவைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பழம் (வயது 70). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பொன்னம்பழத்தின் சொத்தில் அவரின் 2–வது மகனான மாரிமுத்துக்கு (32) பங்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து தனது தம்பி மாயாண்டியுடன் (30) சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னம்பழத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து, மாயாண்டி ஆகியோரை கைது செய்தனர்.
தற்கொலை
இதற்கிடையே, சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய பொன்னம்பழம் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிலுவைபுரத்தில் தனது மனைவி புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற பொன்னம்பழம் அங்கு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை அறிந்த உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பொன்னம்பழம் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து மாரிமுத்து, மாயாண்டி ஆகியோர் மீது புதுக்கோட்டை போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
புதுக்கோட்டை அருகே மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் தீக்குளித்த முதியவர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.