விக்கிரமசிங்கபுரம் அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை பிடிபட்டது

விக்கிரமசிங்கபுரம் அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை பிடிபட்டது.;

Update: 2020-03-07 23:00 GMT
விக்கிரமசிங்கபுரம், 

விக்கிரமசிங்கபுரம் அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை பிடிபட்டது.

சிறுத்தை அட்டகாசம் 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமமான திருப்பதியாபுரத்தில் கடந்த 20 நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளில் கட்டப்பட்டிருந்த நாய் மற்றும் ஆடுகளை சிறுத்தை தூக்கி செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

இதுகுறித்து பாதிக்கபட்டவர்கள் பாபநாசம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாபநாசம் சரக வனவர் மோகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அப்பகுதி மெயின் ரோட்டில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து ஒன்றுக்கு மேற்பட்ட சிறுத்தைகள் அப்பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர்.

கூண்டில் சிக்கியது 

இந்தநிலையில் கடந்த 29–ந் தேதி அதிகாலை திருப்பதியாபுரம் அருகில் உள்ள வேம்பையாபுரம் கிராமத்தில் வசிக்கும் முப்புடாதி (62) என்பவரது வீட்டின் ஆட்டு கொட்டகையில் நுழைந்து அங்கு கட்டப்பட்டிருந்த ஆட்டை கொன்று விட்டு, அதன் 2 குட்டிகளையும் தூக்கி சென்றது. இதுகுறித்து முப்புடாதி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் வனத்துறையினர் சிறுத்தைகளை பிடிக்க வேம்பையாபுரத்தில் ஊருக்கு பின்னால் சிறுத்தை வரும் வழியில் கூண்டு வைத்தனர். அந்த கூண்டில் நாயை கட்டி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கூண்டில் இருந்த நாயை பிடிக்க வந்தபோது சிறுத்தை பிடிபட்டது. உடனே சிறுத்தை கூண்டில் இருந்து தப்பிக்க கடுமையாக போராடி கூண்டை சேதப்படுத்தியது. இதனால் சிறுத்தை தப்பித்து ஊருக்குள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக உடனடியாக வனத்துறையினர் நள்ளிரவில் பாபநாசம் செக்போஸ்ட் வனப்பகுதிக்கு கூண்டை கொண்டு சென்றனர். பிடிபட்ட சிறுத்தையை நேற்று காலை வனப்பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரத்தில் கவுதலை ஆற்றுப்பகுதியில் கொண்டு போய் விட்டனர். பிடிபட்ட சிறுத்தை பெண் சிறுத்தை எனவும், 1½ வயது இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்