முன்விரோதத்தில் 3 பேருக்கு அடி-உதை: தி.மு.க. முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கைது
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேரை தாக்கிய தி.மு.க. முன்னாள் நகராட்சி கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கார்த்திக் (வயது 25). இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு, அரண்வாயல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் தனது நண்பர் நீலகண்டனுடன் திருவள்ளூர் வரதராஜ நகரில் உள்ள தனது உறவினரான ராஜேஷ் என்பவரை பார்க்க வந்தார்.
அப்போது கார்த்திக் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
கவுன்சிலர் கைது
அங்கு திருவள்ளூரை சேர்ந்த நகராட்சி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் சொக்கலிங்கம் (42), மணிகண்டன் உள்பட 4 பேர் வந்தனர். அப்போது அவர்கள் முன்விரோதத்தில் மனதில் வைத்து கொண்டு, கத்தியை காட்டி மிரட்டி கார்த்திக், ராஜேஷ், நீலகண்டன் ஆகிய 3 பேரை அடித்து உதைத்து தாக்கி?னர்.
இதில் காயமடைந்த கார்த்திக் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சொக்கலிங்கத்தை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மணிகண்டன் உள்பட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.