துமகூரு அருகே கோர விபத்து 2 கார்கள் மோதி நொறுங்கின 10 தமிழர்கள் உள்பட 13 பேர் உடல் நசுங்கி சாவு கோவிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்

துமகூரு அருகே கார் மீது மற்றொரு கார் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 தமிழர்கள் உள்பட 13 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.;

Update: 2020-03-06 23:15 GMT
பெங்களூரு, 

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாத் கோவிலுக்கு காரில் வந்திருந்தனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள்

தர்மஸ்தலா மஞ்சுநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அவர்கள் அதே காரில் ஓசூருக்கு புறப்பட்டனர். தட்சிண கன்னடா மாவட்டத்தில் இருந்து பெங்களூரு வழியாக ஓசூர் செல்ல அவர்கள் முடிவு செய்திருந்தனர். துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா அம்ருத்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பேலதகெரே கிராமம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் பயணித்த கார் பெங்களூருவை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது அதே தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சென்ற கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. மேலும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இருந்த தடுப்புவேலியை அந்த கார் இடித்து தள்ளிவிட்டு எதிர் ரோட்டிற்கு சென்றது.

13 பேர் சாவு

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரை சேர்ந்தவர்கள் பயணம் செய்த கார் மீது தறிகெட்டு ஓடிய கார் மோதியது. கார்கள் மோதிக் கொண்டதில் 2 கார்களுமே அப்பளம் போல நொறுங்கின. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் 2 கார்களிலும் இருந்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 7 பேர் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்ருத்தூர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் உயிருக்கு போராடிய 7 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பரிதாபமாக இறந்து விட்டார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே குடும்பத்தினர்

போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சிக்கனபள்ளி கிராமத்ைத சேர்ந்த மஞ்சுநாத் (வயது 35), இவரது மனைவி தனுஜா (25). இந்த தம்பதியின் குழந்தைகள் மாலாஸ்ரீ(4), 9 மாத குழந்தை சைதன்யா ஈஸ்வர் என்கிற சேத்தன், மஞ்சுநாத்தின் உறவினர்களான சவுந்தர்ராஜ் (48), கவுரம்மா (60), ரத்னம்மா (52), சரளா(32), ஸ்ரீசன்யா (14) மற்றும் கார் டிரைவர் ராஜேந்திரன் (27) என்று அடையாளம் தெரிந்தது. மேலும் படுகாயம் அடைந்தவர்களின் பெயர்கள் ஸ்வேதா (32), கங்கோத்திரி (14), மற்றும் ஹர்சிதா (14) என்பதாகும். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய காரில் பயணம் செய்த 4 பேரில் 3 பேர் பலியாகி இருந்தார்கள். அவர்கள் பெங்களூரு அருகே கும்பலகோடு, உனசேமாரத பாளையா கிராமத்தை சேர்ந்த சந்தீப் (36), லட்சுமி காந்த் (24), ராமோஹள்ளி கிராமத்தை சேர்ந்த மது (25) என்று தெரிந்தது. இவர்களது நண்பர் பிரகாஷ் படுகாயம் அடைந்துள்ளார். பலியான சந்தீப், லட்சுமி காந்த், மது ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். ரியல்எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை 3 பேரும் சேர்ந்து செய்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் பெங்களூருவில் இருந்து தர்மஸ்தலா மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.

கோவிலில் தரிசனம்

இதற்கிடையில், விபத்து நடந்த பகுதியை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சரத் சந்திரா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா ஆகியோர் நேற்று காலையில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது விபத்தை ஏற்படுத்திய காரை டிரைவர் அதிவேகமாக ஓட்டி வந்ததும், அதிகாலை 2.30 மணியளவில் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்றும், இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு ஓடி கோர விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

அதே நேரத்தில் தடுப்பு வேலியை இடித்து தள்ளியதுடன் எதிர்ரோட்டிற்கு வந்ததால், மற்றொரு கார் மீது மோதி அதில் இருந்த 10 பேர் பலியாக நேரிட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மஞ்சுநாத் தனது குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்த தர்மஸ்தலா மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றதும், முடி காணிக்கை செய்து, சாமி தரிசனம் முடித்து ஓசூருக்கு திரும்பிய போது விபத்தில் சிக்கி மஞ்சுநாத், அவரது குடும்பத்தினர் பலியாகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உறவினர்கள் கண்ணீர்

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் குனிகல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்ததும் கிருஷ்ணகிரியில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக 10 பேரின் உடல்களும் ஓசூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அதுபோல, பெங்களூருவை சேர்ந்த 3 பேரின் உடல்களும் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பிரகாஷ், ஸ்வேதா, ஹர்சிதா, கங்கோத்திரி ஆகிய 4 பேரும் மேல் சிகிச்சைக்காக துமகூருவில் இருந்து பெங்களூரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும் சோகம்

இதுகுறித்து அம்ருத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலுக்கு சென்று திரும்பியவர்களும், கோவிலுக்கு சென்றவர்களும் என விபத்தில் சிக்கி 13 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்