நிதி ஆதாரத்தை திரட்ட வரிகளை உயர்த்த வேண்டியது அவசியம் பட்ஜெட் தாக்கல் செய்த பின் எடியூரப்பா பேட்டி
நிதி ஆதாரத்தை திரட்ட வரிகளை உயர்த்த வேண்டியது அவசியம் என்று பட்ெஜட் தாக்கல் செய்த பின் எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் அவர் தனது பட்ஜெட் குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரூ.5 ஆயிரம் கோடி
விவசாயத்தை ஊக்குவிக்க நிலம் மற்றும் தண்ணீர் பாதுகாப்புக்கு சில திட்டங்களை அறிவித்துள்ளேன். நீரேற்று பாசனத்திற்கு (லிப்ட் இரிகேசன்) ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளேன். மழை அடிப்படையிலான விவசாய திட்டங்கள் அமல்படுத்தப்படும். பெலகாவி சுவர்ண சவுதாவுக்கு சில துறைகளை மாற்ற முடிவு செய்துள்ளேன்.
சுற்றுலாத்துறைக்கு ரூ.500 கோடி, கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கலசா-பண்டூரி திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். எத்தினஒலே குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளேன். மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு வரும் வரி பங்கு குறைந்துவிட்டது. சரக்கு-சேவை வரி திட்ட இழப்பீடும் குறைந்துவிட்டது.
நிதி ஆதாரத்தை திரட்ட...
இதனால் கர்நாடகத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி குறைந்துள்ளது. பொருளாதார நிலை சரி இல்லை. இதில் மூடிமறைக்க எதுவும் இல்லை. பொருளாதார நிலையை சரியான பாதைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.
நிதி ஆதாரத்தை திரட்ட வரிகளை உயர்த்த வேண்டியது அவசியம். அதனால் பெட்ேரால்-டீசல், மதுபானங்களின் வரியை உயர்த்தியுள்ளோம். இதன் மூலம் கர்நாடக அரசுக்கு கூடுதலாக ரூ.2,700 கோடி வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.