சிந்தாதிரிப்பேட்டையில் 500 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 500 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சியை மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
சென்னை,
சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் அருகே (போலீஸ் பூத் அருகில்) சந்தேகத்துக்கிடமான வகையில் வாகனம் ஒன்று நிற்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன், சுகாதார அலுவலர் கே.வாசுதேவன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் என்.ராஜா, என்.எச்.ஜெயகோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த வாகனத்தில் இரண்டு பெரிய பெட்டிகளில் மாட்டிறைச்சி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த இறைச்சியில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியது.
கெட்டுப்போன மாட்டிறைச்சி
மேலும் வண்டி நிறுத்தப்பட்ட இடத்துக்கு அருகிலேயே அதே துர்நாற்றம் வீசுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். துர்நாற்றம் வீசும் பகுதிக்கு சென்ற அதிகாரிகள் குழு அங்குள்ள ஒரு கடையில் மேலும் இரண்டு பெட்டிகளில் மாட்டிறைச்சி இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். மருத்துவர்கள்ஆய்வு செய்து, அந்த மாட்டிறைச்சியை கெட்டுப் போனது என்றும், சாப்பிட உகந்தது அல்ல என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த 500 கிலோ அளவிலான மாட்டிறைச்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைக்கும் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
போலீசார் விசாரணை
உடனடியாக அந்த இறைச்சி மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அந்த மாட்டு இறைச்சி கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதபடி அழிக்கப்பட்டது.
இந்த மாட்டிறைச்சியை கொண்டு வந்தது யார்? என்பது தெரியவில்லை. மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் கெட்டுப்போன மாட்டிறைச்சியை கொண்டு வந்தது யார்? என்பது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
‘‘கெட்டுப்போன இறைச்சியை உணவுக்குப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் கடைகளிலும் உணவகங்களிலும் தரமற்ற உணவுகள் வழங்குவது தெரிந்தாலும், இதுபோன்ற சம்பவங்களில் யாராவது ஈடுபடுவது கண்டறியப்பட்டாலும் 9444042322 என்ற உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ் அப் எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்’’, என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.