மேல்விஷாரத்தில் வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் சிறிது நேரத்திலேயே முடிந்தது

தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் சார்பில் பொதுமக்கள், அரசியல் கட்சியினருடனான கருத்து கேட்பு கூட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.;

Update: 2020-03-06 22:30 GMT
ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை தொடர்பாக தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் சார்பில் பொதுமக்கள், அரசியல் கட்சியினருடனான கருத்து கேட்பு கூட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில மறுவரையறை ஆணையர் பழனிசாமி தலைமை தாங்கினார். மறுவரையறை ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், கூடுதல் இயக்குனர்கள் ஆனந்தராஜ், லட்சுமிபதி, இணை இயக்குனர் சரவணன், கூடுதல் இயக்குனர் மாலதி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, உதவி கலெக்டர் இளம்பகவத் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் கருத்துகள் தெரிவிக்க வேண்டிய பொதுமக்கள் 30-க்கும் குறைவானவர்களே இருந்தனர்.

வார்டுகள் மறு வரையறை குறித்து கருத்துகள் மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க போதுமான பொதுமக்கள் வரததால் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடிவடைந்தது. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் கேட்டபோது, வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்கனவே தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள் மூலம் தெரியபடுத்தப்பட்டிருந்தது. வார்டு மறுவரையறை ஏற்கனவே நடத்தப்பட்டது. வார்டு மறுவரையறையில் பொதுமக்களுக்கு நிறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

மேலும் செய்திகள்