கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் - தேர்தல் ஆணைய தலைவர் தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வார்டு மறுவரையறை குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் தேர்தல் ஆணைய தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

Update: 2020-03-05 22:45 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை தொடர்பாக தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் சார்பில் பொதுமக்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கான முதலாவது கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வார்டு மறுவரையறை குறித்த 2-வது கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு மறுவரையறை தேர்தல் ஆணைய தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மறுவரையறை தேர்தல் ஆணைய உறுப்பினர் செயலாளர் சுப்பிரமணியன், முதன்மை தேர்தல் அலுவலர்கள் ஆனந்தராஜ், சரவணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக இயக்க இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வரவேற்றார்.

கூட்டத்தில் தமிழ்நாடு மறுவரையறை தேர்தல் ஆணைய தலைவர் பழனிசாமி பேசுகையில், உள்ளாட்சி மற்றும் நகராட்சி வார்டுகள் மறுவரையறை சம்பந்தமான கருத்துகளை தெரிவிக்கலாம். அதன்மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சரவணன்:- வார்டுகள் வரையறை சம்பந்தமான பட்டியல்களை கொடுத்திருந்தால் அதனை பார்த்து கருத்து சொல்ல ஏதுவாக இருக்கும்.

உதயசூரியன் எம்.எல்.ஏ.:- சங்கராபுரம் ஒன்றியம் ரங்கப்பனூர் ஊராட்சியில் மல்லாபுரம் மற்றும் மல்லாபுரம் காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் ரங்கப்பனூர் கிராமம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியிலும், மல்லாபுரம் கிராமம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியிலும் உள்ளன. எனவே சட்டமன்ற தொகுதிக்கு ஏற்றவாறு மல்லாபுரத்தை தனி ஊராட்சியாக உருவாக்க வேண்டும். கல்வராயன்மலையில் ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிதான் உள்ளது. எனவே மலைவாழ் மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில் கூடுதலாக ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவி உருவாக்க வேண்டும், வேங்கோடு ஒன்றியக்குழு உறுப்பினர் வார்டில் புதிதாக சேர்க்கப்பட்ட தாழ்பாச்சேரி ஊராட்சியை சேராப்பட்டு ஒன்றியக்குழு உறுப்பினர் வார்டில் சேர்க்க வேண்டும்.

தி.மு.க. நகர செயலாளர் சிவா(மணலூர்பேட்டை):- அதிக மக்கள் தொகை கொண்ட மணலூர்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உருவாக்க வேண்டும்.

முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இளையராஜா:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு பதவியை அதிகரிக்க வேண்டும். தண்டலை, சிறுவங்கூர்,க.அலம்பலம் ஆகிய ஊராட்சிகளை 2 ஆக பிரிக்க வேண்டும்.

மேலும் பொதுமக்கள் கூறுகையில், கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளை 31 வார்டுகளாக உயர்த்த வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்து தேர்தல் ஆணைய தலைவர் பழனிசாமி பேசுகையில், வார்டு மறுவரையறை சம்பந்தமாக நீங்கள் சொன்ன கருத்துகளை எடுத்து கொண்டோம். மேலும் தாங்கள் மனுக்களாக கொடுத்தால் ஆணையத்திற்கு எடுத்துச்சென்று நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்றார். தேர்தல் ஆணைய உறுப்பினர் செயலாளர் சுப்பிரமணியன் பேசுகையில் வார்டு எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. எல்லை வரையறை மட்டுமே மாற்றி அமைக்க முடியும். ஒவ்வொரு மனுக்கள் மீதும் தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும். வார்டு வரையறை பணியை விரைந்து முடிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட இணை இயக்குநர் ரத்தினமாலா, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையற்கண்ணி உள்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்