கோவையில் பரபரப்பு: மசூதியில் பெட்ரோல் குண்டு வீச்சு - போலீசார் விசாரணை

மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-03-05 23:15 GMT
கோவை,

கோவையை அடுத்த கணபதி வேதாம்பாள் நகரில் இதாயத்துல் மசூதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு மசூதியின் கதவை பூட்டி விட்டு உள்ளே சிலர் தூங்கி கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் மசூதிக்குள் திரியுடன் கூடிய பெட்ரோல் குண்டை மர்ம ஆசாமிகள் வீசினர். அப்போது டமார்... என்று பாட்டில் உடைந்து விழும் சத்தம் கேட்டது. அதை கேட்டு மசூதியில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது மசூதி வாசலில் பெட்ரோல் சிதறி, திரி பொருத்தப்பட்டு இருந்த ஒரு பாட்டில் உடைந்து கிடந்தது.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இது குறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் துறையினர் வந்து பெட்ரோல் வெடிகுண்டை மீட்டு அதில் இருந்த தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அங்கு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்களும் திரண்டனர்.

இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்ட நிலையில், மசூதிக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி திரி வைத்து பெட்ரோல் குண்டு தயாரித்து உள்ளனர். ஆனால் அதை வீசும் போது திரி கொளுத்தப்பட வில்லை. இதனால் திரி பற்ற வைக்கப்படாத நிலையில் கிடந்தது. எனவே பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என்பதை கண்டறிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை வடக்கு மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ் தலைமையில் நிர்வாகிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், கணபதி வேதாம்பாள் நகர் மசூதியில் மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதில் யாருக்கும் காயமோ, சேதமோ ஏற்பட வில்லை. ஆனாலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மசூதிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்