பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை - ராஜவர்மன் எம்.எல்.ஏ. உறுதி

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சாத்தூர் எம்.எல். ஏ. ராஜவர்மன் தெரிவித்தார்.

Update: 2020-03-05 21:45 GMT
சாத்தூர்,

தமிழக அரசால் தொழிலாளர் நலத்துறையின் கீழ் மாவட்டந்தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்புத் திட்டம் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு உள்ளிட்ட 17 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களின் கீழ் 113-க்கும் மேற்பட்ட தொழில்களை உள்ளடக்கிய அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு பதிவு முகாம் சாத்தூரில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தலைமையில் நடந்தது. முகாமில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய மாநில குழு உறுப்பினர் கே.கே.பாண்டியன் முன்னிலை வகித்தார். சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பதிவு பெற்ற 20 தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையும் 60 வயது நிறைவுபெற்ற 20 உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய ஆணையையும்் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்ததால் தான் தொழிலாளர்களின் கஷ்டம் அறிந்து சிறந்த முறையில் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி ஆட்சி செய்துவருகிறார் என்றார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டமலை கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சொந்த செலவில் நிதி வழங்க இருக்கிறேன். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் முதல்-அமைச்சரிடம் பேசி அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை ஏற்பாடு செய்வேன் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், நகர செயலாளர் வாசன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை அண்ணாதொழிற்சங்க தலைவர் பெருமாள், செயலாளர் கண்ணன், இணைசெயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் பாத்திமா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்