ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை பற்றி டுவிட்டரில் அவதூறு பதிவு; அஜித் ரசிகர் கைது
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவு செய்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை விதிகள் மற்றும் தலைக்கவசம் அணிதல், விபத்து மீட்பு உள்ளிட்ட பல்வேறு பொதுநலன் சார்ந்த அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் முகநூல், வாட்ஸ்-அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சாதாரணமாக இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் மக்கள் மனதில் பதியும் வகையில் பிரபலமான நடிகர்கள் கூறுவது போன்று மீம்ஸ் உருவாக்கி அதனை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இவ்வாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து நடிகர் விஜய் படத்தினை வைத்து புல்லிங்கோ எல்லாம் பைக்ல போகும் போது ஹெல்மெட் போடுங்கோ என்று மீம்ஸ் உருவாக்கி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு வரவேற்புகள் தெரிவித்து பதில் அளிக்கப்பட்டிருந்தது. பலரும் ஹெல்மெட் அணிவதாக உறுதி அளித்து பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த மீம்ஸ் பதிவிற்கு வாலிபர் ஒருவர் தவறான முறையில் காவல்துறையை அவதூறாக விமர்சித்து காவல்துறையின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பலரின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் சைபர்கிரைம் உதவியுடன் மேற்கண்ட பதிவு குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். இந்த விசாரணையில் அதனை பதிவு செய்த நபர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா ரெகுநாதபுரம் அருகே உள்ள பி.ஆர்.நகர் எஸ்.எல்.எஸ்.மில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் கார்த்திக்(வயது 25) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் வாலிபரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் அவர் சொந்த ஊரான தூத்துக்குடி பகுதியில் கோவில் திருவிழாவிற்கு வந்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அஜித் ரசிகர் என்பதும், நடிகர் விஜய் படத்தினை போட்டு பதிவு செய்ததால் ஆத்திரமடைந்து அவ்வாறு பதிவு செய்ததாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். வாலிபர் கார்த்திக் கட்டிட வரைபட கலைஞராக சென்னையில் பணியாற்றி வருகிறார் என்பதும், இன்னும் அவருக்கு திருமணமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.