குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை பா.ஜனதா மாநில செயலாளர் பேச்சு

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை என பா.ஜனதா மாநில செயலாளர் வேதரத்தினம் கூறினார்.

Update: 2020-03-05 23:30 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் பா.ஜனதா கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் நேதாஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயலாளர் வேதரத்தினம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதே‌‌ஷ் ஆகிய நாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க இயலாது என்பதை அவர்களுக்காக தொடர்ந்து போராடும் வைகோ, பழ.நெடுமாறன் ஆகிய 2 பேரும் புரிந்து கொண்டனர். இது இந்தியர்களுக்கான சட்டம் இல்லை. வெளிநாடுகளில் இருந்து பாதிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்கு முன் வந்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. முஸ்லிம்களும் நமது சகோதரர்கள் தான். தமிழகத்தில் அரசியல் செய்ய காரணம் இல்லாததால் தி.மு.க.வும் கூட்டணி கட்சியும் அரசியல் லாபத்திற்காக போராட்டத்தை தூண்டுகிறது. இதற்கெல்லாம் காரணம் அன்னிய சக்தி.

புரிந்து கொள்ள வேண்டும்

வடக்கில் காங்கிரசும், தமிழகத்தில் தி.மு.க.வும் போராட்டத்தை தூண்டுகிறது. இது மத அடிப்படையிலான பிரச்சினை இல்லை. அரசியல் ரீதியான பிரச்சினை. இவர்களின் போராட்டத்தை முறியடிக்கும் சக்தி பா.ஜனதாவுக்கு உண்டு. எய்ம்ஸ் மருத்துவமனை நிகழ்ச்சிக்கும், ராணுவ தளவாட கண்காட்சிக்கும் பிரதமர் வந்த போது கருப்பு பலூனை பறக்கவிட்டவர்கள், கருணாநிதியின் வீட்டிற்கு பிரதமர் வந்த போது ஏன் கருப்பு பலூன் பறக்கவில்லை.

இந்தி திணிப்பு என்று ஆட்சிக்கு வந்தவர்கள், கருணாநிதியின் வீட்டிற்கு பிரதமர் வந்தபோது, கருணாநிதியின் பேரக்குழந்தைகள் இந்தியில் தான் பிரதமரிடம் பேசினர். தி.மு.க.வை பற்றி முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்