கடலூர் சிப்காட்டில் டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு சென்றனர்
கடலூர் சிப்காட்டில் டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு சென்றனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள சிப்காட் பகுதியில் டாஸ்மாக் குடோன் இயங்கி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மதுபானங்கள் இங்கு இறக்கி வைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள சில்லரை மதுபான விற்பனை கடைகளுக்கு அனுப்பும் பணி நடக்கிறது.
இந்த நிலையில் இங்கு வேலை பார்க்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
அரசுக்கு லாபம் ஈட்டும் துறையான டாஸ்மாக்கில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று டாஸ்மாக் குடோனுக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அட்டையையும் கழுத்தில் அணிந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சுமை தூக்கும் பணியாளர் சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் தண்டபாணி, பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சண்முகம், கருணாநிதி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்தபடியே பணிக்கு சென்றனர்.
முன்னதாக தாங்கள் கூறிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற 25-ந் தேதி முதல் டாஸ்மாக் குடோன் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.