தனியார் சர்க்கரை ஆலைக்கு, கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் - சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு
சேத்தியாத்தோப்பு அருகே தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பில் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்துள்ள கரும்புகளை இடைத்தரர்கள் மூலம் வெட்டி, தனியார் சர்க்கரை ஆலைக்கு எடுத்துச்செல்வதாக கூறப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின் பேரில், பல்வேறு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டதுடன், இதை தடுத்து நிறுத்தி எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பி வைக்க தனி குழுவும் அமைக்கப்பட்டது. இவர்கள், முறையான ஆவணங்கள் இல்லாமல் கரும்பு லோடு ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சோழத்தரம், ஆண்டிபாளையம் பகுதி விவசாயிகள் தங்களது நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் இதை அறுவடை செய்து, 20 டிராக்டர் மற்றும் லாரிகளில் ஏற்றி வேறு ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்ப முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின் பேரில் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் சாதனை குரல் தலைமையில் தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன், கரும்பு அலுவலர்கள் ராஜதுரை, ரவி, கிருஷ்ணன், ஜோதிமணி, ரமேஷ் மற்றும் கரும்பு உதவியாளர்களுடன் ஆண்டிபாளையம் பகுதிக்கு சென்று வேறு ஆலைக்கு செல்ல இருந்த கரும்பு ஏற்றிய டிராக்டர் களை தடுத்து நிறுத்தி எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
தனியார் ஆலைக்கு கரும்புகளை அனுப்புவதற்கான காரணம் குறித்து விவசாயிகளிடம் கேட்ட போது, கரும்பு அறுவடை செய்யப்பட்ட உடன் எங்களுக்கு பணப் பட்டுவாடா செய்து விடுகிறார்கள். மேலும் ஆலைக்கு ஏற்றி கொண்டு செல்லும் கரும்புகளையும் எங்களை காத்திருக்க வைக்காமல் உடனடியாக இறக்கி விடுகிறார்கள். இதனால் தான் நாங்கள் தனியார் ஆலையை நாடி செல்கிறோம் என்று தெரிவித்தனர்.