அரசியல் சாசனத்தின்படி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும்; மந்திரி மாதுசாமி பேச்சு

அரசியல் சாசனத் தின்படி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும் என்று சட்டசபையில் சட்டத்துறை மந்திரி மாதுசாமி பேசினார்.;

Update: 2020-03-04 23:15 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம், அரசியல் சாசனம் குறித்த விவாதம் நடத்துவதற்கான தீர்மானத்தை சபாநாயகர் காகேரி தாக்கல் செய்து தொடங்கி வைத்தார். சட்டசபையில் நேற்று அவற்றின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி பங்கேற்று பேசியதாவது:-

அரசியல் சாசனம் 70 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அம்பேத்கர் இதை உருவாக்கினார். இதில் மனித உரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை, உணவு உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறை, தேர்தல் ஆணையம், கணக்கு தணிக்கை துறை அரசியல் சாசன நிகர்நிலை அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஆனால் அவ்வப்போது, இத்தகைய அமைப்புகள் அதிகாரத்தை ஆக்கிரமிப்பது, ஒரு துறை இன்னொரு துறையின் அதிகாரத்தில் தலையிடுவது என்பது நடந்து வருகிறது.

அந்தந்த துறைகள் தங்களுக்கு உரிய அதிகார எல்லைக்குள் சரியாக செயல்பட்டிருந்தால், இந்த 70 ஆண்டுகளில் நமது நாடு எங்கேயோ போய் இருக்கும். பணம், அதிகார போட்டி போன்றவற்றால் மக்கள் பிரதிநிதிகள் மரியாதையை இழந்துவிட்டனர். அரசியல் சாசனப்படி நாம் நடந்து கொள்கிறோமா? என்பதை நமது மனசாட்சியை தொட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். பணம் இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிலை உள்ளது.

ஒரு நாள் முழுவதும் கூலி வேலை செய்தால் ரூ.140 கிடைக்கிறது. சிலர் அலுவலகத்தில் உட்கார்ந்்து கொண்டு ரோடு பணிக்கு அனுமதி வழங்கினால் ரூ.50 ஆயிரம் கமிஷன் வந்துவிடுகிறது. இத்தகைய நிலை தான் உள்ளது.

நமது நாட்டில் கிராமப் புறங்களில் வாழும் மக்கள் இன்னும் 2-ம் தர மக்களாகவே இருக்கிறார்கள். அரசியல் சாசனத்தின் விருப்பங்கள் நிறைவேறவில்லை. அவற்றை நிறைவேற்றும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் உள்பட அனைத்து துறை யினரும் அவரவர் அதிகாரத்திற்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு மந்திரி மாதுசாமி பேசினார்.

மேலும் செய்திகள்