தேவிபட்டினத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம்
தேவிபட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டி பெண்கள் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.;
பனைக்குளம்,
மத்தியஅரசு அறிவித்த தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை தமிழகத்தில் நடை முறைப்படுத்தக்கூடாது என்றும், இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக சட்டப்பேரவையில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தேவிபட்டினம் பகுதிகளை சேர்ந்த பெண்கள் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கூடாரம் அமைத்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.
அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் வது.ஆனந்த், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ, ஆசிப் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும் இதில் தேவிபட்டினம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜாகீர் உசேன், ஜமாத் பிரமுகர்கள், இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு தொடர்ந்து எதிர்ப்பு குரல்களை முழக்கமிட்டு வருகின்றனர்.
கீழக்கரையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த 2 நாட்களாக பெண்கள் உள்பட ஏராளமானோர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இச்சட்டத்தை கண்டிக்கும் வகையில் இறந்த உடல்களை எடுத்து செல்லும் சவப்பெட்டியை சாலையில் வைத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அதனை அகற்ற கோரினர். இதனையடுத்து சவப்பெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டது.