கோவையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு - விமானியின் சாதுர்யத்தால் 82 பேர் உயிர் தப்பினர்
கோவையில் இருந்து மும்பை புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாதுர்யத்தினால் 82 பேர் உயிர் தப்பினர்.
கோவை,
கோவையில் இருந்து மும்பைக்கு நேற்று காலை 7.50 மணிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 76 பயணிகளும், 6 ஊழியர்கள் உள்பட மொத்தம் 82 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட 15-வது நிமிடத்தில் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுபிடித்தார்.இதைத்தொடர்ந்து மீண்டும் கோவை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை தரை இறக்கப்போவதாகவும், அதற்கு தகுந்தவாறு ஓடுதளத்தில் தயாராக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை கோவை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 82 பேர் உயிர் தப்பினர்.
அந்த விமானத்தில் இருந்த பயணிகள் வேறு விமானத்தில் மும்பை புறப்பட்டு சென்றனர். சிலர் விமான பயணத்தை ரத்து செய்தனர். அதன்பின்னர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.