பிளஸ்-1 தேர்வு; 13 ஆயிரத்து 882 மாணவ-மாணவிகள் எழுதினர் - 871 பேர் வரவில்லை
பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், தேனி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 882 பேர் தேர்வை எழுதினர். 871 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேனி,
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக தேனி மாவட்டத்தில் 52 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு் உள்ளன. இந்த தேர்வை எழுத மாவட்டத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 753 மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று நடந்த தமிழ் தேர்வை, 13 ஆயிரத்து 882 பேர் எழுதினர். ஹால்டிக்கெட் பெற்றவர்களில் 871 பேர் தேர்வு எழுத வரவில்லை.
கல்வி மாவட்டம் வாரியாக, தேனி கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 728 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்றிருந்தனர். அவர்களில் 5 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுதினர். 271 பேர் தேர்வு எழுத வரவில்லை. பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 782 பேர் அனுமதி பெற்று இருந்த நிலையில், 3 ஆயிரத்து 518 பேர் தேர்வு எழுதினர். 264 பேர் தேர்வு எழுத வரவில்லை. உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 243 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தனர். அவர்களில் 4 ஆயிரத்து 907 பேர் தேர்வு எழுதினர். 336 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இதற்கிடையே தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்வில் முறைகேடு நடக்காமல் தடுக்க பறக்கும் படையினர் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
தேர்வு அறை மற்றும் தேர்வு மையங்களில் 1,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களுக்கு காலை 7 மணிக்கே மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வரத்தொடங்கினர். தேர்வு மைய வளாகத்தில் அமர்ந்து இருந்து தேர்வுக்காக கடைசிக்கட்ட பரபரப்புடன் படித்துக் கொண்டு இருந்தனர். இந்த தேர்வையொட்டி, தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.