தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்: சின்னமனூர் ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது கடமலை-மயிலையை அ.தி.மு.க. பிடித்தது

ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் சின்னமனூர் ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது. கடமலை-மயிலை ஒன்றியத்தை அ.தி.மு.க. பிடித்தது.

Update: 2020-03-04 23:15 GMT
சின்னமனூர், 

தேனி மாவட்டத்தில் மொத்தம் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மூலம் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. இதில் போடி, உத்தமபாளையம் ஆகிய 2 ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க.வும், கம்பம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பா.ஜ.க.வும் கைப்பற்றியது. தேனி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

சின்னமனூர், கடமலை-மயிலை, பெரியகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்கு பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த 3 ஒன்றியங்களிலும் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 2-வது முறையாக ஜனவரி 30-ந்தேதி நடந்தது. அப்போது அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இருகட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் இழுபறி நீடித்ததால், அன்றைய தினம் தேர்தலில் பங்கேற்க கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. இதனால் மீண்டும் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சின்னமனூர் உள்பட 3 ஒன்றியங்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி நேற்று மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சின்னமனூர் ஒன்றியத்தை தி.மு.க.வும், கடமலை-மயிலை ஒன்றியத்தை அ.தி.மு.க.வும் கைப்பற்றியது.

சின்னமனூர்

சின்னமனூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 10 வார்டுகளில், 6 வார்டுகளை தி.மு.க.வும், 4 வார்டுகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றியது. இதனால் பெரும்பான்மையில் இருந்து வந்த தி.மு.க., சின்னமனூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 1-வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி, திடீரென்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இதனால் சின்னமனூர் ஒன்றியத்தில் தலா 5 வாா்டுகளை பிடித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சமநிலை வகித்தன. இதையடுத்து 2-வது முறையாக நடந்த மறைமுக தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் 3-வது முறையாக மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதற்கு முன்னதாக அ.தி.மு.க.விற்கு தாவிய 1-வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தியிடம் தி.மு.க.வினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுக தீர்வு ஏற்பட்டதை அடுத்து, திடீர் திருப்பமாக ஜெயந்தி, மீண்டும் தனது தாய் கட்சியான தி.மு.க.விற்கு திரும்பினார். இதனால் சின்னமனூர் ஒன்றியக்குழுவில் தி.மு.க.வின் கவுன்சிலர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது. இதனையடுத்து நேற்று நடந்த மறைமுக தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் பங்கேற்றனர். ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இதனால் ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் நிவேதா அண்ணாதுரை, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கடமலை-மயிலை

இதேபோல் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 14 வார்டுகளில், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தலா 7 வார்டுகளில் வெற்றிபெற்றன. இதனால் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிப்பதில் 2 கட்சியினரும் சமநிலை வகித்தன. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி நடந்த மறைமுக தேர்தலில், தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் 7 பேர் மட்டுமே பங்கேற்றனர். அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 2-வது முறையாக ஜனவரி மாதம் 30-ந்தேதி நடந்த மறைமுக தேர்தலில், 2 கட்சிகளின் வார்டு கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 8-வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க.வில் இணைந்தார். இதனால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்களின் பலம் 8ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் நேற்று நடந்த மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று, ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றியது. இதையடுத்து ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்