‘பி.எஸ்.-4’ ரக வாகனங்களை 31-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் வட்டார போக்குவரத்து அதிகாரி தகவல்

‘பி.எஸ்.-4’ ரக வாகனங்களை வருகிற 31-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-04 23:15 GMT
தேனி, 

மோட்டார் வாகனங்கள் மூலம் காற்று மாசுபடுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக, வாகனங்கள் காற்று மாசு வெளியிடுவதை ஒழுங்குபடுத்தும் வகையில் ‘பாரத் ஸ்டேஜ்’ (பி.எஸ்.) என்ற பெயரில் தர நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், வாகன தயாரிப்பு தொடர்பான பல்வேறு ஒழுங்கு விதிகளை வெளியிடுகிறது. அந்த விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் வாகனங்களை மட்டுமே நாடு முழுவதும் விற்கவும், பதிவு செய்யவும் முடியும். அந்தவகையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ‘பி.எஸ்.-4’ விதிமுறைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே நாடு முழுவதும் விற்பனையும், பதிவும் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் ‘பி.எஸ்.6’ ரக விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளது. காற்று மாசுபாடு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு ‘பி.எஸ்.4’ ரக வாகனங்கள் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ரக வாகனங்கள் விற்பனைக்கும் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் தடைவிதிக்கப்படுகிறது.

31-ந்தேதி கடைசி

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நாடு முழுவதும் ‘பி.எஸ்.4’ ரக வாகனங்களை பதிவு செய்வதற்கு கடைசி காலக்கெடுவாக வருகிற 31-ந்தேதி வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த ரக வாகனங்களை வாங்கியவர்கள் அதை வருகிற 31-ந்தேதிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே தற்காலிக வாகன பதிவு பெற்றவர்களும் 31-ந்தேதிக்குள் நிரந்தர பதிவு மேற்கொள்ள வேண்டும். 31-ந்தேதிக்கு பிறகு இந்த ரக வாகனங்களை பதிவு செய்ய முடியாது. எனவே, தேனி மாவட்டத்தில் ‘பி.எஸ்.4’ ரக வாகனங்களை வாங்கியவர்கள் அதை பதிவு செய்யாமல் இருந்தால், உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்