கம்பம் பகுதியில் 2-ம் போக சாகுபடி: நெற்பயிர்களுக்கு உரமிடும் பணியில் விவசாயிகள் தீவிரம்

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

Update: 2020-03-04 23:00 GMT
கம்பம்,

கடந்த ஆண்டு முதல்போக சாகுபடி ஆகஸ்டு மாதம் தொடங்கியது. டிசம்பர் மாதம் நெற்பயிர்கள் விளைந்து, அறுவடை பணிகள் முடிந்தன. இதனைத்தொடர்ந்து கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 2-ம் போக சாகுபடிக்காக நிலங்களில் நாற்றங்கால் அமைத்து பின்பு நெற்பயிரை நடவு செய்தனர். நடவு செய்து தற்போது 60 நாட்கள் ஆன நிலையில் நெற்பயிருக்கு உரமிடும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நெற்பயிருக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து அவசியம். பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தூர்கட்டும் பருவத்தில் வழங்குவதன் மூலம் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். இதனால் வயலில் யூரியா உரம் பயன்படுத்தப்படுகிறது. யூரியாவுடன், வேப்பம் புண்ணாக்கு, பாக்டம்பாஸ் ஆகியவை கலந்து பயன்படுத்தப்படுவதால் பயிர்களுக்கு நீண்ட நாட்கள் வரை தழைச்சத்து கிடைக்கும் மேலும் இவை மண் மூலம் பரவும் நோய்கள், பூச்சிகள் மற்றும் புழுக்களுக்கு எதிராக செயல்பட்டு பயிருக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்