தேனி அருகே மாவுப்பூச்சி தாக்குதலால் கொய்யா சாகுபடி பாதிப்பு விவசாயிகள் கவலை
தேனி அருகே மாவுப்பூச்சி தாக்குதலால் கொய்யா சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனி,
தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி, நாகலாபுரம், தர்மாபுரி, தாடிச்சேரி, தப்புக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கொய்யா சாகுபடி நடக்கிறது. இந்த பகுதிகளில் விளையும் கொய்யா பழங்களுக்கு தேனி மாவட்டம் மட்டும் இன்றி மதுரை, சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும் தனி மவுசு உள்ளது.
தற்போது கொய்யா பழம் விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. சில இடங்களில் ெகாய்யா பழம் அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தேனி அருகே பள்ளப்பட்டி, தர்மாபுரி உள்ளிட்ட இடங்களில் கொய்யா செடிகளில் வெள்ளைப்பூச்சி எனப்படும் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் பூச்சிகள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் கொய்யா சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவுப்பூச்சியால் பாதிப்பு
இந்த மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் அவை கட்டுப்படுத்தப்படுவது இல்லை. அதற்கு மாறாக மேலும் பாதிப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி சீனிராஜ் என்பவரிடம் கேட்டபோது, “எனது தோட்டத்தில் உள்ள கொய்யா செடிகளில் அதிக அளவில் மாவுப்பூச்சி பாதிப்பு உள்ளது. மருந்து அடித்தால் பூச்சி தாக்குதல் அதிகரிக்கிறது. இதனால், தண்ணீரை வைத்து செடிகளை முழுவதும் கழுவி, இலைகளில் படிந்துள்ள பூச்சிகளை அப்புறப்படுத்தி வருகிறேன். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், இவ்வாறு செய்வது அதிக செலவாகிறது. கொய்யா விளைச்சலும் பாதிக்கப்பட்டு உள்ளது. தென்னையிலும் இந்த பூச்சிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நன்மை செய்யும் பூச்சிகளை வளர்த்து, செடிகளில் விட்டால் மாவுப்பூச்சிகளின் தாக்கம் குறையும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை வாங்கி விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.