பவானிசாகர் அருகே மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல் பள்ளிக்கூட நேரத்துக்கு பஸ் இயக்கக்கோரி போராட்டம்
பவானிசாகர் அருகே பள்ளிக்கூட நேரத்துக்கு பஸ் இயக்கக்கோரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பவானிசாகர்,
பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு, பட்டரமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பவானிசாகர் மற்றும் தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் நேற்று காலை பவானிசாகர்-பண்ணாரி சாலையில் உள்ள புதுப்பீர்கடவு பிரிவில் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் வசதி
இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவ-மாணவிகள் கூறும்போது, ‘நாங்கள் பவானிசாகர் மற்றும் தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம்.
நாங்கள் காலை நேரத்தில் பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லை. இதன் காரணமாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பவானிசாகர்-பண்ணாரி ரோட்டில் உள்ள புதுப்பீர்கடவு பிரிவில் இருந்து பஸ் ஏறி பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் குறித்த நேரத்தில் பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தோம்.
இயக்க கோரிக்கை
எனவே காலை நேரத்தில் மேற்கண்ட கிராமங்களுக்கு பஸ் இயக்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டோம்’ என்றனர்.
அதற்கு போலீசார், ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் அந்த பகுதியில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
அதை ஏற்றுக்கொண்ட மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக பவானிசாகர்-பண்ணாரி ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.