திசையன்விளை அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது

திசையன்விளை அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

Update: 2020-03-04 23:00 GMT
திசையன்விளை, 

திசையன்விளை அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

கர்ப்பிணி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தோப்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் லாரி டிரைவர். இவருடைய மனைவி இந்துமதி (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக தனது பெற்றோர் ஊரான பொன்னாத்தி கிராமத்திற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்துமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து திசையன்விளையில் உள்ள 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் இந்துமதியை ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டு இருந்தனர்.

பெண் குழந்தை பிறந்தது

ஆனால் இந்துமதிக்கு செல்லும் வழியிலேயே பிரசவ வலி அதிகமானது. இதனால் டிரைவர் கல்யாண சுந்தரம் ஆம்புலன்சை திசையன்விளை அருகே உள்ள கோட்டை கருங்குளம் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தினார்.

உடனடியாக அதில் இருந்த மருத்துவ உதவியாளர் ராஜே‌‌ஷ்வரி ஆம்புலன்சில் வைத்து இந்துமதிக்கு பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்கள் அருகில் உள்ள கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்துமதிக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது.

திசையன்விளை 108 ஆம்புலன்சில் இதுவரை 10 குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்