போஸ்டல் ஆர்டருக்கு கூடுதல் கமி‌ஷன் வசூல் 2 பெண்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

தபால் அலுவலர்கள் மூலம் தலா ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-03-04 21:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் போஸ்டல் ஆர்டருக்கு கூடுதல் கமி‌ஷன் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு சம்மந்தப்பட்ட தபால் அலுவலர்கள் மூலம் தலா ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் கமி‌ஷன் 

தூத்துக்குடி சிந்துபூந்துறை சாலை தெருவை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி சூரியகலா. இவர் கடந்த 03–02–17 அன்று கோவில்பட்டி லட்சுமிபுரம் துணை தபால் அலுவலக தபால் அலுவலரிடம்(போஸ்ட் மாஸ்டர்) ரூ.50–க்கு போஸ்டல் ஆர்டர் வாங்கினார். அதில் கமி‌ஷன் ரூ.2.50 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தபால் அலுவலர் ரூ.5 கமி‌ஷன் வாங்கினார். இதனை கேட்ட போது, தபால் அலுவலர் அந்த பெண்ணை அவதூறாக பேசி உள்ளார்.

இதைத் தொடர்ந்து சூரியகலா ரூ.95 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கோரி தூத்துக்குடி நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நுகர்வோர் கோர்ட்டு தலைவர் தேவதாஸ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு தலைவர், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நஷ்டஈடாக ரூ.15 ஆயிரமும், செலவுத் தொகை ரூ.5 ஆயிரமும், கூடுதலாக வசூல் செய்த போஸ்டல் ஆர்டர் கமி‌ஷன் ரூ.2.50–ம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் ஒரு வழக்கு 

இதே போன்று நெல்லை மாவட்டம் பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அடைக்கலம் மகன் முத்துலட்சுமி என்பவரும் கோவில்பட்டி லட்சுமிபுரம் துணை தபால் அலுவலகத்தில் ரூ.50–க்கு போஸ்டல் ஆர்டர் வாங்கினார். அதற்கும் கூடுதலாக ரூ.2.50 கமி‌ஷன் தொகை வசூலித்ததாக மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நுகர்வோர் கோர்ட்டு தலைவர் தேவதாஸ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த தலைவர் தேவதாஸ், பாதிக்கப்பட்ட முத்துலட்சுமிக்கு, தபால் அலுவலர் ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு மற்றும் ரூ.5 ஆயிரம் செலவுத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்