இருசக்கர வாகன விபத்தில்தான் அதிகமானோர் உயிரிழப்பு: போலீஸ் சூப்பிரண்டு தகவல்
கடந்த ஆண்டில் மாவட்டம் முழுவதும் நடந்த விபத்துகளில், இரு சக்கர வாகன விபத்துகளிலேயே அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் கூறினார்.
கருத்தரங்கம்
மாவட்ட போலீஸ் துறை, வட்டார போக்குவரத்து துறை சார்பில் விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சங்கரலிங்கம் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் பேசியதாவது:-
மாணவ பருவம்
மாணவ பருவம் என்பது மிகவும் மகிழ்ச்சியான பருவம். மாணவர்கள் பட்டாம்பூச்சி போல சிறகடித்து பறக்க திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் தனித்திறனை தாங்களே முயன்று வளர்த்துக்கொள்ள வேண்டும். முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அணையாத நெருப்பாக மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
எதிர்மறையான எண்ணங்களை கைவிட்டு வாழ்வில் முன்னேற நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் உழைக்க வேண்டும்.
சாலை விதிகள்
மாணவ பருவத்திலேயே சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்றினால் விபத்துகள் தவிர்க்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இருசக்கரவாகனத்தில் சென்றவர்களே அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விதிகளை பின்பற்றி நடந்திருந்தால் பெரும்பாலான இந்த விபத்துகள் நடந்திருக்க வாய்ப்பில்லை.
மாணவர்கள் சாலை விதிகளை பின்பற்றுவதில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும்.
994 பேர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 994 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இருசக்கரவாகன விபத்தில் உயிரிழந்தோர் 443 பேர் ஆகும். கார் விபத்துகளில் உயிரிழந்தோர் 256 பேர். கனரக வாகன விபத்துகளில் 295 பேர் இறந்துள்ளனர். இதில் இரு சக்கரவாகனங்களில் உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் தலைகவசம் அணிந்து செல்லாததால்தான் உயிரிழக்க நேரிட்டுள்ளது. இதனாலேயே போலீசார் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைகவசம் அணிந்து செல்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாணவர்களும் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும். சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்க முடியும்.
நடப்பு ஆண்டில் இதுவரை நடந்த விபத்துகளில் 45 பேர் உயிரிழந்துள்ளார்கள். இனி வரும் நாட்களில் சாலை விபத்துகள் நடைபெறாமல் இருக்க அனைவரும் சாலைவிதிகளை பின்பற்ற வேண்டுகிறேன். விபத்தில்லா விருதுநகர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் நோக்கமாகும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
செல்போன்
இதனை தொடர்ந்து பேசிய சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், விபத்துகளை தவிர்க்க வாகனங்களில் அதி வேகமாக செல்லக்கூடாது என்றும், வாகனத்தில் செல்லும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மது போதையில் வாகனங்களை ஓட்டிச்செல்லக் கூடாது என்றும் சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி சாலைவிதிகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகுசுந்தரம் நன்றி கூறினார்.