கொரோனா வைரஸ் பாதிப்பு... என்னை காப்பாத்துங்க...; கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி ஏற்படுத்திய பரபரப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் என்னை காப்பாத்துங்க என்று கூறி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Update: 2020-03-04 07:09 GMT
2 பேருக்கு பாதிப்பு
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர்.

எனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கமத்திய அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இந்தியாவில் டெல்லி மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதுதவிர வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

காப்பாற்ற வேண்டும்
இந்த நிலையில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது தாயாருடன் கையில் பையுடன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர், அங்குள்ள டாக்டர்களிடம், தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும், இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்றும், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிவித்தார்.

மேலும் என்னை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று டாக்டர்களிடம் கூறினார். அதை கேட்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த சிறுமிக்கு டாக்டர்கள் பல்வேறு கட்ட சோதனைகளை செய்தனர். இதில், அந்த சிறுமிக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அவர் வெளிநாடு எங்கும் செல்லவில்லை என்பது தெரியவந்தது.

சிறுமியால் பரபரப்பு
இதையடுத்து அந்த சிறுமியிடம், சாதாரண காய்ச்சல் தான். பயப்பட தேவை இல்லை என்று கூறி உரிய மருந்து, மாத்திரைகளை கொடுத்து டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கொரானா வைரஸ் பாதிப்பு என்று கூறியதால் சிறுமி தனது தாயாருடன் வந்தார். அவருக்கு அது போன்ற பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்