குடியுரிமை திருத்த சட்டம் நாட்டிற்கு தேவை - நடிகர் ராதாரவி பேச்சு
குடியுரிமை திருத்த சட்டம் நாட்டிற்கு தேவை என்று திருப்பூரில் நடந்த போராட்டத்தில் நடிகர் ராதாரவி பேசினார்.;
திருப்பூர்,
பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகள் திருப்பூரில் பதுங்கி இருக்கின்றனர். எனவே பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறும் திருப்பூரை மீட்டெடுக்க வேண்டும். இந்த பயங்கரவாதிகளை திருப்பூரில் இருந்து வெளியேற்றக்கோரியும், திருப்பூர் மாநகர இந்து முன்னணியின் சார்பில், திருப்பூர் புஷ்பா தியேட்டர் பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நேற்று 6-வது நாளாக கோடி நாமாவளி தொடர் பிரார்த்தனை போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தொடர் போராட்டத்தில் இணை அமைப்பாளர் ராஜேஷ், மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேஸ்வரன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் பா.ஜனதா பேச்சாளரும், நடிகருமான ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருப்பூரில் நைஜீரியர்கள், வங்கதேசம், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பலர் உள்ளனர். இவர்களை வெளியேற்ற வேண்டும். தி.மு.க.வின் தலைமை சரியில்லை.
பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி தமிழ்நாட்டை கெடுத்து வைத்துள்ளார்கள். தந்தை பெரியார் சிலை உடைப்பிற்கு காரணம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தான். வருகிற தேர்தலில் பா.ஜனதா தமிழகத்தில் காலூன்றும். இந்துக்கள் என்ற எண்ணத்தோடு வாக்களிக்க வேண்டும்.
பா.ஜனதா கட்சியின் கொள்கைகள் பிடித்துள்ளதால் பல நடிகர்கள் இதில் சேர இருக்கிறார்கள். நடிகர் கார்த்திக்கை கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளேன். இந்துக்கள் ஒன்றாக சேர்ந்து வருகிறாா்கள். இதனால் வருகிற தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெறும். பா.ஜனதா கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்.
குடியுரிமை திருத்த சட்டம் நாட்டிற்கு தேவை. இந்த சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும். திருப்பூரில் வெளிமாநிலத்தினரை வேலைக்கு சேர்க்கும் போது, அவர்களின் விவரங்களை வாங்கிக்கொண்டு வேலைக்கு சேர்க்க வேண்டும். முஸ்லிம்கள் பயப்படும் அளவிற்கு இந்த சட்டம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் 6-வது நாளாக நடந்த இந்த போராட்டத்தை நேற்றுடன் முடிப்பதாக அறிவிக்கப்பட்டது. புஷ்பா சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், இதனை கைவிடும்படி போலீசார் இந்து முன்னணியினரிடம் கேட்டுக்கொண்டனர்.
இதனை ஏற்றுக்கொண்ட இந்து முன்னணியினர் இந்த போராட்டத்தை நேற்று இரவுடன் முடித்துக்கொண்டனர். இருப்பினும் இதுபோன்ற போராட்டங்கள் வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெறும் எனவும் இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர்.