ஜாமீனில் வெளியே வந்து மனைவியை கொலை செய்தவர் கைது
ஜெயிலுக்கு வந்து தன்னை பார்க்காத ஆத்திரத்தில் ஜாமீனில் வெளியே வந்து மனைவியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.;
மும்பை,
மும்பை சிவ்ரி பகுதியை சேர்ந்தவர் யாஸ்மீன் பானு(வயது25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிவ்ரி பி.பி.டி. டோல் பிளாசா அருகே உள்ள பொதுக்கழிவறையில் பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் யாஸ்மீன் பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், யாஸ்மீன் பானுவை அவரது கணவர் நசீம் அன்சாரி(32) கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
நசீம் அன்சாரி மீது சிவ்ரி, அந்தேரி, பைதோனி, காலாசவுக்கி, மாட்டுங்கா, தானே உள்ளிட்ட பல இடங்களில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவர் சம்பவத்தன்று ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். ஜெயிலில் இருந்த போது தன்னை ஒரு முறை கூட பார்க்க வராத மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த அவர், நேராக சிவ்ரி சென்றார். அப்போது மனைவி யாஸ்மீன் பானு வேறு நபருடன் இருந்ததை பார்த்து மேலும் ஆத்திரமடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் மனைவியிடம் நைசாக பேசி அருகில் உள்ள பொதுக்கழிவறைக்கு அழைத்துச்சென்று, கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிஓடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நசீம் அன்சாரியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் பைகுல்லா மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிவது போலீசாருக்கு தெரியவந்ததால், அங்கு சென்று நசீம் அன்சாரியை கைது செய்தனர்.