நந்தியம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே பைனான்சியர் வெட்டிக்கொலை

மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே பைனான்சியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.;

Update: 2020-03-03 22:18 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

நள்ளிரவு மின்சார ரெயிலில் இறங்கி அந்த வழியாக சென்ற பயணிகள் முதியவரின் உடலைப் பார்த்து சென்னை கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்த நிலையில், மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மீஞ்சூர் போலீசார் மற்றும் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, இறந்து கிடந்தவர் திருவெற்றியூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த சக்கரை(வயது 63) என்பது தெரியவந்தது.

இவரது உடல் அருகே கிடந்த செல்போன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், இவரது மனைவி விமலா(55). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சர்க்கரை, சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்சியர் தொழில் செய்துவந்தார்.

இந்த நிலையில் நேற்று வெளியே சென்ற சக்கரை நள்ளிரவு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பதற்றம் அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்ததாக தெரிகிறது.

சர்க்கரையின் கழுத்து, தலை உள்பட 12 இடங்களில் வெட்டு காயங்களுடன் உடலை கைப்பற்றிய மீஞ்சூர் போலீசார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரியவில்லை. மேலும் பைனான்சியர் தொழிலில் யாருடனாவது தகராறு ஏற்பட்டு அவர்கள் கடத்திவந்து கொலை செய்துவிட்டு உடலை வீசி சென்று விட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்