திருப்பத்தூர் வங்கியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீஸ்காரர் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த கலெக்டரிடம் முறையிடுவோம் - குடும்பத்தினர் தகவல்

திருப்பத்தூர் வங்கியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட போலீஸ்காரர் யோகேசுவரன் சாவுக்கான பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்த கலெக்டரிடம் முறையிடுவோம் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Update: 2020-03-03 22:15 GMT
திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணம் வைக்கப்படும் அறைக்கு பாதுகாப்பு பணிக்கு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை சேர்ந்த போலீஸ்காரர் யோகேசுவரன் (வயது 29) சென்று இருந்தார். நேற்று முன்தினம் காலையில் பணியில் இருந்த அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் விசாரணை நடத்தினார். அதே நேரத்தில் போலீஸ்காரர் யோகேசுவரன் குடும்பத்தினர், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து யோகேசுவரன் சாவுக்கான பின்னணி என்ன? என்பதை கண்டறிவதற்கான விசாரணை தீவிரம் ஆகி உள்ளது.

யோகேஸ்வரன் குறித்து போலீசார் கூறுகையில் “அவர் தொண்டை வலி காரணமாக மேலூரில் உள்ள தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவர் பயன்படுத்திய மாத்திரைகள் அவர் வைத்திருந்த துணி பையில் இருந்ததால் அதனை வைத்து விசாரித்து வருகிறோம். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி அவர் யார்-யாரிடம் எல்லாம் பேசி இருக்கிறார் என்ற தகவலை திரட்டி வருகிறோம்” என்றனர்.

இதுதொடர்பாக போலீஸ்காரர் யோகேசுவரனின் சகோதரர் சங்கர் மற்றும் குடும்பத்தினர் கூறுகையில், “யோகேசுவரன் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர். அவரது டைரியை படித்து பார்த்தேன். தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவோ, தனக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறது என்றோ அந்த டைரியில் எங்கும் குறிப்பிடவில்லை. மேலும் அவர் பயன்படுத்தி வந்த போனை கேட்டோம். அதை தர மறுக்கிறார்கள். மேலும் அவருடன் பணியாற்றிய நண்பர்களுடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆகையால் இனிமேல் யோகேசுவரன் சாவு குறித்து சரியான முறையில் விசாரணை நடத்த நாங்கள் மாவட்ட கலெக்டரிடம் முறையிட வேண்டிய நிலையில் உள்ளோம்” என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்