தர்மபுரி நகரில் மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தர்மபுரி நகரில் மீன்கடைகளில் திடீர் ஆய்வு நடத்திய அதிகாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர்.

Update: 2020-03-03 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பானு சுஜாதா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணி, மீன்வளத்துறை ஆய்வாளர் அசினாபானு, தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மீன் கடைகளில் பார்மலின் கலக்கப்பட்டு மீன் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தினார்கள்.

இந்த ஆய்வின்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மீன்களில் பார்மலின் ரசாயனம் கலக்கப்படவில்லை என்பது உறுதியானது. சில கடைகளில் தரம் குறைவாக இருந்த ரூ.1,200 மதிப்பிலான 15 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நோட்டீஸ்

இந்த ஆய்வின்போது மீன்களை பல நாட்களுக்கு இருப்பு வைத்து விற்பனை செய்யக்கூடாது. மீன் கடைகளில் தரைகள், ஐஸ் கலன்களை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். மீன்களை விற்பனைக்காக அதிக நேரம் வெயிலில் வைக்கக்கூடாது. உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத மீன்கடைகள் உடனடியாக இணையதளம் மூலமாக விண்ணப்பித்து உரிமத்தை பெற வேண்டும்.

உணவு பாதுகாப்பு உரிமத்தை உரிய நேரத்தில் புதுப்பிக்க வேண்டும். 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்க தவறினால் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் உணவு பாதுகாப்புத்துறையின் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

துண்டு பிரசுரம்

இந்த ஆய்வின்போது மீன் கடைக்கான உரிமம் பெறாதவர்கள் மற்றும் உரிமத்தை புதுப்பிக்காதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்தனர். மேலும் உரிமம் பெற விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து கடைக்காரர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்