ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் சிவகாமி அம்பாள் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் சிவகாமி அம்பாள் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது.

Update: 2020-03-03 22:00 GMT
ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் சிவகாமி அம்பாள் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

மாசித் திருவிழா 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் சிவகாமி அம்பாள் உடனுறை நடுநக்கர் மத்தியபதீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு மாசித் திருவிழா கடந்த மாதம் 24–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி–அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

9–ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலையில் சுவாமி–அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

தேரோட்டம் 

காலை 10.35 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரின் முன்பாக கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் வழிபாட்டு குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி–அம்பாள் யானைத்தந்த பல்லக்குகளில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று, தீர்த்தவாரி 

விழாவின் நிறைவு நாளான இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேசுவரி, தக்கார் இசக்கியப்பன், ஒருங்கிணைப்பாளரும், ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி.யுமான மாசானமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்