கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்; கூடுதலாக எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை
கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். கூடுதலாக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்லணை
காவிரி டெல்டா பகுதிகளுக்கு பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் வழியாக பகிர்ந்தளிக்கும் அணையாக உள்ளது கல்லணை. தொழில் நுட்பங்கள் வளராத 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் கரிகாலனால் கட்டப்பட்டதாகவும், ஓடும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட முதல் அணை என பெருமை கொள்ளும் அணையாகவும் கல்லணை விளங்குகிறது. தஞ்சையில் உள்ள கல்லணையை பார்க்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கரிகாலன் பூங்கா, மணிமண்டபம், குழந்தைகள் விளையாடும்பகுதி என பலவும் கல்லணையில் உள்ளன. தண்ணீர் நிறைந்து ஓடும் காலங்களில் எட்டி நின்று ஆற்றின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், தண்ணீர் குறைவாக உள்ளபோது ஆற்றில் இறங்கி குளிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். வெள்ளக்காலங்களை தவிர மற்ற நேரங்களில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைவாக ஓடும் என்பதால் இங்கு குளிப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகம்.
எச்சரிக்கை பலகை
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் பல இடங்களில் நீர்ச்சுழல் திடீரென என உருவாகி அதில் பலர் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர். கொள்ளிடத்தில் அதிக உயிரிழப்புகள் நிகழ்வதால் கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்று பாலத்திலும். கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்க கூடிய கரையோர பகுதிகளிலும் பொதுப்பணித்துறையின் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எச்சரிக்கையை மீறி சுற்றுலா பயணிகள் பலரும் ஆற்றுக்குள் இறங்கி குளிக்கின்றனர். கல்லூரி மாணவர்கள். குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் தங்களது குழந்தைகளுடன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கின்றனர்.
கோரிக்கை
கல்லணையில் உள்ள ஒலிபெருக்கி மூலம் கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்காதீர்கள், ஆபத்தான பகுதி, குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது என்று விடுமுறை நாட்களில் மற்றும் சாதாரண நாட்களிலும் அறிவிப்பு செய்யப்படுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் சர்வ சாதாரணமாக கொள்ளிடம் ஆற்றின் மணற்போக்கி பகுதிவரை வந்து குளிக்கின்றனர்.
கொள்ளிடம் ஆற்றில் தற்போது அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் அருகில் குளிப்பதற்கு என்று ஒரு இடத்தை பாதுகாப்பான முறையில் அமைத்து தரவேண்டும். கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக குளிக்க தடை செய்யப்பட்ட பகுதி, குளிக்காதீர்கள் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.