திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 188–வது அவதார தின விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 188–வது அவதார தின விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 188–வது அவதார தின விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அய்யா வைகுண்டர் அவதாரபதி
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆண்டுதோறும் அய்யா வைகுண்டர் அவதார தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோன்று இந்த ஆண்டு 188–வது அவதார தின விழா நேற்று நடந்தது.
இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் அதிகாலையில் பணிவிடை, உகப்படிப்பு, காலையில் அன்னதர்மம் நடந்தது. மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை, அன்னதர்மம், மாலையில் பணிவிடையை தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அவதார தின விழா
விழாவின் சிகர நாளான நேற்று அய்யா வைகுண்டர் அவதார தின விழா நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடந்தது.
காலை 6.45 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதலும், அவதார தின விழா பணிவிடையும் நடைபெற்றது. அப்போது கடற்கரையில் கூடியிருந்த திரளான பக்தர்கள் ‘அய்யா சிவ சிவ அரகரா அரகரா‘ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதர்மம், இனிமம் வழங்கப்பட்டது.
பேச்சு போட்டி
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவில் ‘சான்றோர்களின் துவையல் தவசு‘ என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், ‘நாராயணர், வைகுண்டருக்கு சொன்ன உபதேசங்கள்‘ என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், ‘அகிலத்திரட்டு அம்மானை விருத்தம் பாடுதல்‘ என்ற தலைப்பில் விருத்தப்போட்டியும், அகிலத்திரட்டு அம்மானையில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் சரியான விடை தேர்ந்தெடுக்கும் போட்டியும் நடந்தது.
போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா அரை கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அகிலத்திரட்டு அம்மானை குறித்து தூத்துக்குடி கிருஷ்ணவேணி கணேசன், மாவடி செந்தூர் நாகராஜன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை முன்னாள் துணை செயலாளர் ராமகிருஷ்ணன், குளச்சல் சாந்தகுமாரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இரவில் புலவர் குரு சிவச்சந்திரனின் அருளிசை வழிபாடு நடைபெற்றது.
பின்னர் நேற்று அதிகாலையில் அகிலத்திரட்டில் அய்யா வைகுண்டர் கூறிய வாழ்வியல் கருத்து பற்றி நாஞ்சில் ஜீவா சொற்பொழிவு நிகழ்த்தினார். தொடர்ந்து திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாகராஜன், பாம்பன்குளம் நந்தினி ஆகியோர் திரு ஏடு வாசித்தனர்.
திரளான பக்தர்கள்
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ரெட்டியார்பட்டி நாராயணன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் தர்மர், செயலாளர் பொன்னுதுரை, துணை தலைவர் தோப்புமணி, பொருளாளர் ராமையா நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன், இணை தலைவர்கள் அய்யாபழம், பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜ பெருமாள், செல்வின், சட்ட ஆலோசகர் சந்திரசேகரன், முன்னாள் செயலாளர் சிவலிங்கம், முன்னாள் அமைப்பாளர் ராமச்சந்திரன்,
ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், முன்னாள் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கிரஹாம் பெல், முன்னாள் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மோகன் குமாரராஜா, தொழில் அதிபர்கள் வள்ளியூர் அன்பழகன், நெல்லை ராஜசேகர், திருச்செந்தூர் செல்வகுமார், ராமகிருஷ்ணன், திசையன்விளை செல்வபெருமாள், பொட்டல் முத்துகுட்டி, லெப்பைகுடியிருப்பு தங்கராஜ், ஈரோடு ராமமூர்த்தி, திண்டிவனம் கவுன்சிலர் செல்லபெருமாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.