மருத்துவ கல்லூரி தொடக்க விழாவில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி குறித்து தகவல் தெரிவிக்காத மத்திய மந்திரி; எம்.பி.க்கள் குரல் கொடுப்பார்களா?
மருத்துவ கல்லூரி தொடக்கவிழாவில் கலந்து கொண்ட மத்திய மந்திரி மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி குறித்து தகவல் ஏதும் தெரிவிக்காதது ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
பாராட்டு
விருதுநகரில் ரூ.380 கோடி மதிப்பிலான மருத்துவகல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு தலைமை தாங்கி பேசிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன், சுகாதார துறையில் பல சாதனைகளை புரிந்து வரும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்ற தமிழக அரசு ஒரே நாளில் 2 மருத்துவகல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளதும் அதற்கான விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பதும் தனது 27 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பெரும் வியப்பு அளிப்பதாக தெரிவித்தார். 11 மருத்துவ கல்லூரிகளுக்கும் இந்த மாத இறுதிக்குள்ளேயே அடிக்கல் நாட்டப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளதோடு அடுத்த ஆண்டில் இங்கு வரும்போது பிரமாண்ட அளவில் மருத்துவ கல்லூரி இங்கு தொடங்கப்பட்டு இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய மந்திரியின் இந்த பாராட்டு, விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி
இதனை தொடர்ந்து தனது பேச்சில் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை பற்றி குறிப்பிட்ட அவர், இந்த ஆஸ்பத்திரி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு இணையாக உலக தரத்தில் கட்டப்படும் என்று உறுதி அளித்தாரே தவிர எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான நிதி ஒதுக்கீடு எப்போது கிடைக்கும், கட்டுமான பணி எப்போது தொடங்கும், ஆஸ்பத்திரி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் தனது பேச்சை முடித்துக்கொண்டார்.
காச நோய் ஒழிப்பு திட்டத்தில் தமிழகம் நாட்டிற்கே முன்னோடியாக திகழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த மத்திய மந்திரி, மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரி குறித்து விரிவான விளக்கம் ஏதும் அளிக்காதது, ஏன் என்று தெரியவில்லை.
ஏமாற்றம்
இதேபோன்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான நிர்வாக அலுவலகமும் டெல்லியில் அமைக்கப்படும் என்பது பற்றியும் மத்திய மந்திரி எதுவும் குறிப்பிடவில்லை. மத்திய அரசே நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைவராலும் வலுத்து வரும் நிலையில், ஜப்பான் கூட்டுறவு நிறுவனத்தின் உதவியை நாடியது ஏன் என்பது குறித்தும் மத்திய மந்திரி விளக்கம் அளிக்க வில்லை.
தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதற்கான ஆஸ்பத்திரிகள் ஓராண்டுக்குள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டை கடந்த பின்பும் நிதி ஒதுக்கீடும் செய்யாமல் கட்டுமான பணிகளும் தொடங்காமல் திட்டம் முடங்கியுள்ளதற்கு விளக்கம் அளிக்காதது மாவட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோரிக்கை
இந்த விழாவில் பேசிய முதல்-அமைச்சரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி விரைவில் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்வதுடன் கட்டுமான பணியை விரைவில் தொடங்கி ஆஸ்பத்திரியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதன் நிர்வாக அலுவலகத்தை மதுரையிலேயே அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
தமிழக எம்.பி.க்களும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்தித்து இதனை வலியுறுத்த வேண்டியது அவசியமாகும்.