நெல்லை அருகே புத்தகப்பையை வீசி அரசு பள்ளி மாணவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ; சமூகவலைதளங்களில் பரவியதால் பரபரப்பு
நெல்லை அருகே அரசு பள்ளி மாணவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏர்வாடி,
சமூகவலைதளங்களான வாட்ஸ்-அப், முகநூல், டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பகிரப்படுகின்றன. தற்போது எந்த சம்பவமாக இருந்தாலும் அதனை வீடியோ காட்சியாக பதிவேற்றம் செய்து, அதிலும் பரபரப்பான காட்சிகள் வைரலாக பரப்பப்படுகிறது. நெல்லை அருகே காதலர் தினத்தன்று பள்ளிக்கூட மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டுவது போல் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பள்ளி மாணவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அந்த மாணவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி, சைக்கிள்கள், புத்தகப்பைகளை தூக்கி வீசுகின்றனர். மேலும், இந்த காட்சிக்கு பின்னணி இசையும் சேர்க்கப்பட்டு உள்ளது. இது ரவுடிகள் மோதிக்கொள்வதுபோல் இருந்தது.
இதுகுறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘‘நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சிதான் இது என்பது தெரியவந்தது. அதாவது அந்த பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு தரப்பாகவும், 9-ம் வகுப்பு மாணவர்கள் இன்னொரு தரப்பாகவும் பிரிந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலையில் பள்ளிக்கூடம் முடிவடைந்து வெளியே வந்தபோது இரு தரப்பு மாணவர்களும் மோதிக்கொண்டுள்ளனர்.
அதனை ஒருவர் தனது செல்போனில் வீடியோ காட்சியாக பதிவு செய்து, சமூக வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்து உள்ளார்’’ என்பது தெரியவந்துளது.
இந்த காட்சி, ‘கூகுள்’ தளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு முதல் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த மோதல் நடந்த பள்ளிக்கூடம் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அந்த மாணவர்களின் விவரங்களை சேகரித்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.