கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு எதிரொலி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,607 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு எதிரொலியாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,607 கன அடியாக அதிகரித்துள்ளது.;

Update: 2020-03-03 00:00 GMT
மேட்டூர்,

கர்நாடக அணைகளில் இருந்து கடந்த மாதம் 25-ந் தேதி, காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 29-ந் தேதி ஒகேனக்கல் வந்தடைந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 183 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை வினாடிக்கு 1,607 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்மட்டம் உயர்வு

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட, அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் 105.14 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 105.17 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்