சின்னசேலம் அருகே பரபரப்பு: பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற வாலிபருக்கு தர்மஅடி

சின்னசேலம் அருகே பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவரை கைது செய்ய போலீசார் வராததால் அவர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-02 22:30 GMT
சின்னசேலம்,

சின்னசேலம் அருகே உள்ள வி.கிரு‌‌ஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி மாதேஸ்வரி(வயது 40). இவர் நேற்று மதியம் வி.கிரு‌‌ஷ்ணாபுரம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வந்த ஈரியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் சஞ்சய் காந்தி(35), திடீரென மாதேஸ்வரியை மானபங்கப்படுத்த முயன்றதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து சஞ்சய் காந்தியை பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுபற்றி கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் போலீசார் வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீஸ் வராததை கண்டித்து மடத்து ஏரி அருகே விருத்தாசலம்-சேலம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பின்னர் சஞ்சய் காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்