கத்தார் நாட்டில் உணவின்றி தவிக்கும் மகனை மீட்டுத்தரக்கோரி பெண் மனு
கத்தார் நாட்டில் உணவின்றி தவிக்கும் மகனை மீட்டுக்கொண்டுவரக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் உசிலங்காட்டுவலசை பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் என்பவரின் மனைவி பஞ்சவர்ணம். இவர் உசிலங்காட்டுவலசை ஊராட்சித் தலைவர் கண்ணம்மாள் மருங்கப்பன் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு உறவினர்கள் மற்றும் கிராமத்தினருடன் வந்து கண்ணீர் மல்க மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மகன் செல்வராஜ்(வயது23). டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் மாதம் கத்தார் நாட்டுக்கு டிரைவர் வேலைக்கு சென்றார். அங்கு தனியார் பள்ளியில் வாகன டிரைவராக பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.பள்ளி விடுமுறை சமயத்தில் தனியார் ஒருவரிடம் டிரைவராக மாற்று பணிக்கு சென்றுள்ளார். அப்போது வழிதெரியாமல் திசை மாறி சென்றுவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் எனது மகனை கண்டித்ததுடன் அடித்து துன்புறுத்தினாராம்.
மேலும், ஊதியம் எதுவும் தராமல் பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளை வைத்துக்கொண்டு காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துவிட்டதால் எனது மகன் அங்கிருந்து வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கழிவறையிலேயே பூட்டி வைத்து 3 மாதமாக கொத்தடிமை போன்று கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதன்பின்னர் அங்கிருந்து தப்பித்து வெளியில் வந்து கத்தார் நாட்டில் வேறு வேலைக்கு செல்ல முடியாமலும் சொந்த ஊருக்கு வரமுடியாமலும் அங்கேயே சுற்றிதிரிந்துள்ளார். இதனிடையே அங்குள்ள நண்பர் ஒருவர் மீட்டு கடந்த ஒருமாதமாக உதவி செய்து தங்க வைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப்பில் தனது நிலைமையை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.அதனை பார்த்துதான் எனது மகனின் நிலை குறித்து அறிந்து கொண்டேன். உணவுக்கு கூட வழியின்றி சொந்த ஊருக்கு வர முடியாமல் தவித்து வரும் எனது மகனை உடனடியாக மீட்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.