வேளாண் பொறியியல் துறையின் மூலம் 9 ஆண்டுகளில் ரூ.102 கோடியில் வளர்ச்சி பணிகள்: சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் தகவல்

வேளாண் பொறியியல் துறையின் மூலம் மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.102 கோடியே 72 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-02 11:35 GMT
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேளாண் பொறியியல் துறை
வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திரமயமாக்கும் திட்டம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், சூரிய ஒளி கூடார உலர்த்தி அமைக்கும் திட்டம், வேளாண் எந்திரங்கள் வாடகை மையம் அமைக்கும் திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம், ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த நிலையான ஒருங்கிணைந்த மானாவாரி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் இந்த துறையின் மூலம் ரூ.89 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் கருவிகள், விவசாய நில மேம்பாட்டு பணிகள், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் ரூ.75 கோடியே 63 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளன.

தடுப்பணைகள்
தடுப்பணைகள், பண்ணை குட்டைகள், மண்கரைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள், புதிய கட்டிடங்கள், கிடங்குகள், பரிவர்த்தனை கூடங்கள் உள்ளிட்ட பணிகள் ரூ.13 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 9 ஆண்டுகளில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் ரூ.102 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்மூலம் சுமார் 12 ஆயிரத்து 550-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்