நாட்டு வெல்லத்திற்கு வரவேற்பு அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
இடைக்காட்டூர் கிராமத்தில் நாட்டு வெல்லத்திற்கு வரவேற்பு அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே இடைக்காட்டூர், திருப்பாச்சேத்தி, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் எக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டது. படமாத்தூர் தனியார் சர்க்கரை ஆலையை நம்பி ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிட்டு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனர். நாளடைவில் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு கரும்பிற்கான பணத்தை சரிவர வழங்காததால் பல விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை நிறுத்தி விட்டனர்.
சமீப காலமாக நாட்டு வெல்லம், சர்க்கரைக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதை தொடர்ந்து மீண்டும் கரும்பு பயிரிட்டு வெல்லம் தயாரிக்க தொடங்கி உள்ளனர். இடைக்காட்டூர், பெரும்பச்சேரி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. ராட்சத இரும்பு கொப்பரையில் கரும்பு சாற்றை ஊற்றி சூடுபடுத்தி அதன்பின் வெல்லம், சர்க்கரை உள்ளிட்டவைகள் தயாரிக்கின்றன. ஒரு கொப்பரைக்கு 70 முதல் 90 கிலோ வரை வெல்லம் கிடைக்கும். நாள் ஒன்றுக்கு 5 கொப்பரைகள் வரை வெல்லம் தயாரிக்கலாம். ஏக்கருக்கு 2,500 கிலோ வரை வெல்லம் கிடைக்கும். ஒரு கொப்பரை காய்ச்சி வெல்லம் எடுக்க 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகிறது.
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை அனுப்புவதை விட சொந்தமாக வெல்லம் தயாரிப்பது லாபகரமாக இருப்பதால் தற்போது விவசாயிகள் மீண்டும் வெல்லம் தயாரிக்க தொடங்கி உள்ளனர். மதுரையில் இருந்து மொத்த வியாபாரிகள் வந்து வெல்லத்தை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதால் தினசரி பணம் விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது. வெல்லம் காய்ச்சி விற்பனை செய்வதால் 70 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது. செலவு போக 50 சதவீத லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்து இதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.