குடும்ப தகராறில் மோதல்: 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு வெட்டு

கீழ்பென்னாத்தூர் அருகே அண்ணன்-தம்பி குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறில் கொடுவாளால் வெட்டியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-03-01 22:30 GMT
கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூர் கொல்லைகொட்டாய் பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் (வயது 57), சின்னதுரை (43). அண்ணன், தம்பியான இவர்கள் இருவரும் அருகருகே உள்ள நிலத்தில் வீடு கட்டிக் கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களின் தாயார் தனபாக்கியம் (75). ராமச்சந்திரன் வீட்டில் இருந்து வருகிறார்.

தனபாக்கியம் 6 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நகை மற்றும் பணத்தை தனக்கு தருமாறு சின்னதுரை தாயிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்ணன், தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் சின்னதுரை அவரது தாயிடம் நகை மற்றும் பணத்தை கேட்டு உள்ளார். இதனை ராமச்சந்திரன் தட்டிக் கேட்ட போது சின்னதுரை தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் ராமச்சந்திரன் தலையில் வெட்டியதில் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரனின் மகன் பூங்காவனம் (34), மனைவி குமாரி (55), மருமகள் தேவி (29) ஆகியோர் சின்னதுரையிடம் தட்டி கேட்டனர். அவர்களையும் அவர் கொடுவாளால் தலை, கை ஆகிய இடங்களில் வெட்டி உள்ளார்.

இதையடுத்து ராமச்சந்திரனும், பூங்காவனமும் சேர்ந்து சின்னதுரை மற்றும் அவரது 2 மனைவிகளான தேவகி(38), அம்பிகா (37) ஆகியோரை கொடுவாளால் வெட்டியதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குமாரியும், மியாட் மருத்துவமனையில் பூங்காவனமும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த மற்ற 5 பேரும் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் சிறுநாத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்