சென்னை எழும்பூர்-மதுரை இடையே 2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ ரெயில் ஊழியர்கள், பயணிகள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்
சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ ரெயில் 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை ரெயில்வே ஊழியர்கள், பயணிகள் நேற்று ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்.
சென்னை,
சென்னை எழும்பூர்-மதுரை இடையே அதிவேகத்தில் இயக்கப்படும் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ ரெயில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. மும்பை-கோவா இடையே 2017-ம் ஆண்டில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் முதன்முதலாக இயக்கப்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் 2-வதாக எழும்பூர்-மதுரை இடையே இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் இயக்கப்பட்டு வரும் தேஜஸ் ரெயிலில், கழிவறையில் தொடுதிரை வசதி கொண்ட எல்.இ.டி. விளக்குகள், ஒவ்வொரு இருக்கைக்கு பின்புறமும் ‘வை-பை’ வசதியுடன் கூடிய ‘மேஜிக் பாக்ஸ்’ திரைகள், செல்போனுக்கு ‘சார்ஜ்’ ஏற்றும் வசதிகள், உட்புற வெளிப்புற தானியங்கி கதவுகள் உள்ளிட்ட மேலும் பல சிறப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறது.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் முழுவதும் சென்னை ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்டவையாகும். இந்த ரெயிலில் 23 பெட்டிகள் உள்ளன. அதில் 18 பொது வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், 2 உயர்வகுப்பு பெட்டிகள், 3 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகும். விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வை தரும் தேஜஸ் ரெயிலின் உயர் வகுப்பு பெட்டியில் 56 பயணிகளும், இதர குளிர்சாதன பெட்டியில் 78 பயணிகளும் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் தேஜஸ் ரெயில், காலை 6 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். மறுமார்க்கமாக மதியம் 3 மணிக்கு மதுரையில் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்தடையும். 6½ மணி நேரத்தில் சென்றடைவதால் தொழில் சம்பந்தமாக வந்து செல்வோருக்கு வரபிரசாதமாக இந்த ரெயில் அமைந்துள்ளது.
இந்த ரெயில் திருச்சி மற்றும் கொடைரோடு ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். முதலில் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது. பின்னர் பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரிக்க தற்போது வியாழக்கிழமை தவிர்த்து, வாரத்தில் 6 நாட்கள் வழக்கமான ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூர்-மதுரை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொண்டாடும் விதமாக நேற்று ‘கேக்’ வெட்டி கொண்டாடப்பட்டது.
எழும்பூர் நிலைய மேலாளர் மேத்யூஸ் தலைமையில் நேற்றைய தேஜஸ் ரெயில் என்ஜின் டிரைவர் மகேந்திரன், துணை என்ஜின் டிரைவர் குமார், கார்டு சுப்பிரமணி மற்றும் தேஜஸ் ரெயில் பயணிகள் ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்.