மங்களூருவில் அடுக்குமாடி கட்டிட பணியின் போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளிகள் சாவு ஒருவர் படுகாயம்

மங்களூருவில் அடுக்குமாடி கட்டிட பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளிகள் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.;

Update: 2020-02-28 23:40 GMT
மங்களூரு, 

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுனில் உள்ள கங்கனாடியில் பன்ஸ் ஹாஸ்டல் சர்க்கிள் பகுதியில் தொழில் அதிபர் ஏ.ஜே.ஷெட்டி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு அவர் புதியதாக அடுக்குமாடி வணிகவளாக கட்டிடத்தை கட்டி வருகிறார். இந்த கட்டிட பணி நேற்றும் தொடர்ந்தது. சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதாவது சுற்றுச்சுவர் அருகில் 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் பகல் 1.30 மணி அளவில் திடீரென்று சுற்றுசுவருடன் மண் சரிந்து விழுந்தது. மண் விழுந்து அமுக்கியதில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மூச்சுத்திணறினர்.

2 பேர் பலி- ஒருவர் படுகாயம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் கத்ரி, பாண்டேஸ்வரி பகுதிகளில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினரும், கத்ரி போலீசாரும், தொழிலாளர்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மண் சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளிகள் மூச்சுத்திணறி பலியானது தெரியவந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் ஒரு தொழிலாளி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதுபோல் பலியான 2 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் பற்றி அடையாளம் தெரிந்தது. அதாவது பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பீமண்ணா (வயது 30), மேற்குவங்காளத்தை சேர்ந்த மசூத் (28) என்பதும், காயமடைந்தவர் மேற்குவங்காளத்தை சேர்ந்த அனிக்குல் (23) என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மங்களூரு மாநகராட்சி அதிகாரிகளும் விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டனர். மாநகராட்சி அனுமதி பெற்று கட்டிடம் கட்டப்பட்டதா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வேதவியாஸ் காமத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “புதிய அடுக்குமாடி கட்டிட பணிக்காக பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த போது மணல் சரிந்து விழுந்துள்ளது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது கவலை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காயமடைந்தவர் உரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

மேலும் செய்திகள்