திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: கடைக்காரர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை
திருவள்ளூர் அருகே எலெக்ட்ரிக்கல் கடைக்காரரின் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள காவாங்கொளத்தூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 45). இவர் பேரம்பாக்கத்தில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அவர் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள தனது உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார்.
மாலை அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.
பீரோவை திறந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்க நகையும், ரூ.90 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது.
விசாரணை
அதேபோல காவாங்கொளத்தூர் திடீர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (59). விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு காலை திருவள்ளூருக்கு சென்றார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1,650 திருட்டு போனது தெரியவந்தது. மேலும் கொள்ளை நடந்த 2 வீடுகளுக்கும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவாகி உள்ளதா? என தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து பாஸ்கர் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.