திருப்பூரில் பா.ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் பா.ஜனதா சார்பில் பேரணி நடைபெற்றது.
திருப்பூர்,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதராகவும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றிற்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிகள் முஸ்லிம்களிடம் பொய்யான தகவலை பரப்பி பீதியை உருவாக்குவதாக கூறியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பேரணி நடைபெற்றது.
திருப்பூரிலும் பா.ஜனதா கட்சி சார்பில் சி.டி.சி. கார்னர் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணி சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேரணி நடத்துமாறு பா.ஜனதாவினரிடம் போலீசார் கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் பேரணி தொடங்கும் இடம் மாற்றப்பட்டது.
அதன்படி பேரணியில் கலந்து கொள்ள கட்சி கொடி மற்றும் பதாகைகளுடன் திருப்பூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் குவிந்தனர். பின்னர் அங்கிருந்து சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய சட்டங்களுக்கு ஆதரவாகவும், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர்.பேரணிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் செந்தில்வேல், தெற்கு மாவட்ட தலைவர் பொன்ருத்ரகுமார் ஆகியோர் தலைமை தாங்கிதொடங்கிவைத்தனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜனதா தேசிய இளைஞரணி துணைத்தலைவர் முருகானந்தம், ஆர்.எஸ்.எஸ். கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா முன்னாள் தலைவர் சின்னச்சாமி உள்பட கலந்துகொண்டு பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியின் போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டு சென்றனர்.மேலும், இந்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீசுகளை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
மேலும், பேரணியில் கலந்துகொண்டவர்கள் பலர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வகையில் தயாரிக்கப்பட்ட பனியன்களை அணிந்தபடி சென்றனர். பேரணியில் சிவன் போல் வேடம் அணிந்து ஒருவரும், பார்வதி வேடம் அணிந்து ஒரு பெண்ணும் சென்றனர். முன்னதாக பேரணி தொடங்கும் போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவுதெரிவித்து பலூன்கள் பறக்கவிடப்பட்டன. பேரணியில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். பேரணியை முன்னிட்டு பல்லடம் ரோட்டில் உள்ள பள்ளிவாசல் முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து பேரணி கலெக்டர் அலுவலகம் முன்பு சென்று முடிவடைந்ததும், அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா தேசிய இளைஞரணி துணைத்தலைவர் முருகானந்தம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவித்து, வன்முறையை தூண்டுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்த பேரணியையொட்டி பல்லடம் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த பகுதியில்சிறு, சிறு வீதிகள் வழியாக போக்குவரத்தை மாற்றம் செய்து, போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்தனர்.
மேலும், திருப்பூர் துணை போலீஸ் கமிஷனர் பத்ரிநாராயணன், போலீஸ் சூப்பிரண்டு திஷா மிட்டல் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.