குடியிருப்புக்குள் புகுந்து தொழிலாளியை தாக்க முயன்ற சிறுத்தைப்புலியால் பரபரப்பு

குடியிருப்புக்குள் புகுந்து தொழிலாளியை தாக்க முயன்ற சிறுத்தைப்புலியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-02-28 22:30 GMT
பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி பாடசாலை வீதி, அட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். காட்டு யானை, சிறுத்தைப் புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வருகிறது. மேலும், சிறுத்தைப்புலி ஒன்று குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளை கடித்து கொன்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

கொளப்பள்ளி பாடசாலை வீதி மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் யோகநாதன் (வயது 60), கூலிதொழிலாளி. இவரது வீட்டின் பின்பக்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தைப்புலி வந்தது. அப்போது மதிற்சுவர் வழியாக வீட்டு மேற்கூரையில் சிறுத்தைப்புலி பாய்ந்தது. இந்த சமயத்தில் மதிற்சுவர் உடைந்து விழுந்து சேதம் அடைந்தது.

மேலும் மேற்கூரையும் சேதம் அடைந்தது. அப்போது கழிப்பறைக்கு சென்று இருந்த யோகநாதன், கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அப்போது சிறுத்தைப்புலி அவரை தாக்க முயன்றது. இதைக்கண்ட யோகநாதன் பயத்தில் அலறினார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி ஓடியது. மேலும் குடியிருப்புக்குள் சிறுத்தைப்புலி வந்த தகவல் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வனவர் கணே‌‌ஷ், வன காப்பாளர் ராஜேஸ்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சிறுத்தைப்புலியின் கால் தடங்களை ஆராய்ந்தனர். மேலும் சேதம் அடைந்த மதிற்சுவர், மேற்கூரைகளை பார்வையிட்டனர். அப்போது குடியிருப்புக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சிறுத்தைப்புலி கால்நடைகளை தேடி குடியிருப்புக்குள் வருகிறது. இரை கிடைக்காத சமயத்தில் எதிர்படும் மனிதர்களை தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே சிறுத்தைப்புலியை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினாலும் வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பது இல்லை. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்