கோவையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதாவினர் பேரணி
கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் பேரணி நடைபெற்றது.
கோவை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டம் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கோவை மாவட்ட பா.ஜனதா சார்பில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். முன்னதாக நடந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன் பங்கேற்று பேசும்போது கூறியதாவது:-
நாங்கள் இங்கு காவல்துறையின் முறையான அனுமதிபெற்று பேரணி நடத்துகிறோம். ஆனால் சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீசாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. அவ்வாறு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அதை கண்டித்தும் போராட்டம் நடத்தப்பட்டது.
எங்கள் கட்சிக்காரர்கள் பிரியாணி வாங்கிக்கொண்டு கூட்டத்துக்கு வருபவர்கள் இல்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பாரத அன்னை மட்டும் தான். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாங்களும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். இந்த சட்டம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி நன்றாக விளக்கி உள்ளார்.
காவல்துறையின் அனுமதியின்றி தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக அரசுக்கும், மக்களுக்கும் எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடியை அமொிக்க அதிபர் டிரம்ப் என்னுடைய நல்ல நண்பர் என்றும், ஆனால் பிடிவாதக்காரர் என்றும் சொல்கிறார். பிடிவாதக்காரர் என்றால் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டார் என்பதை அவர் எடுத்து கூறியுள்ளார்.
தமிழகத்திலேயே அதிகளவு உயிர் தியாகம் செய்த கட்சி என்றால் அது பாரதீய ஜனதா கட்சிதான். குடியுரிமை திருத்த சட்டம் நாட்டில் அமல்படுத்தப்பட்டு விட்டது. அந்த சட்டத்தை திரும்ப பெறும் நிலை இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பேரணியானது கோவை செஞ்சிலுவை சங்கம் முன் தொடங்கி, கலெக்டர் அலுவலகம் வரை சென்று முடிந்தது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், வடக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன், மாநில செய்தி தொடர்பாளர் கனகசபாபதி, முன்னாள் எம்.எல்.ஏ. சின்ராசு, பொதுக்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், தாமு, மாவட்ட செய்தி தொடர்பாளர் சபரிகிரீஷ் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
பேரணியையொட்டி பாதுகாப்பு பணியில் மத்திய அதிவிரைவுப்படையினர் மற்றும் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.