ரேஷன் கடையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி தொடக்கம்
வேலூர் வள்ளலாரில் உள்ள ரேஷன் கடையில், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி தொடங்கப்பட்டு குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வேலூர்,
தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் அம்மா மருந்தகம், பசுமை காய்கனி அங்காடி, கற்பகம் கூட்டுறவு சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2018-ம் ஆண்டு அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு சிறப்பங்காடி என்ற வகையில், ரேஷன்கடையையொட்டி உள்ள கடைகளில் அவை செயல்பட்டு வருகிறது.
இங்கு, சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், சோப்பு வகைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பங்காடிகள் திறக்கப்பட்டன.
அதன்படி வேலூர் தாலுகாவில் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதி-3 விவேகானந்தர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி தொடங்கப்பட்டு உள்ளது. வேலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் இந்த சிறப்பங்காடி செயல்பட்டு வருகிறது.
இங்கு கற்பகம் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்கள், காதி தயாரிப்பு பொருட்கள் மற்றும் அரிசி, பல்வேறு பிஸ்கெட் வகைகள், குளியல், சலவை சோப்புகள், கடலை பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. பொருட்களின் அதிகபட்ச விலைக்கும் குறைவாக அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து ரேஷன்கடை, சிறப்பங்காடி ஊழியர் இளங்கோ கூறுகையில், ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் சிறப்பங்காடியில் உள்ள பொருட்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். அனைத்து பொருட்களும் மளிகை கடைகளை விட குறைந்த விலையில் தரமாக கிடைக்கிறது.
அதனால் இந்த சிறப்பங்காடி பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வேலை நாட்களில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.